நதியரசியும் கடலரசனும்
மங்கையிவள் மன்னனுடன்
ஊடல் கொண்டே
அண்ணணாம் ஆதவனுடன்
கிளம்பிச் சென்றாள்
மன்னனைப் பிரிந்ததாலே
மாண்பும் மங்கியது
மரியாதையும் குன்றியது
பிறந்த வீட்டிலே
கருமை கொண்டாள்
சிறுமை ஏற்றாள்
இடியென தாக்கியும்
மின்னலென வெட்டியும்
சுற்றத்தார் தூற்றியதில்
தாளாத்துயர் கொண்டாள்
அழுதே கரைந்தாள்
பெருமழையென பொழிந்தாள்
மன்னனைத் தேடி...
ஊடல் கொண்டு சென்றவளை
சற்றே தவிக்கவிட
மன்னவனும் மறைந்திருந்தான்
அவளாய் தேடி வர...
மங்கையிவள் வந்த
இடமொ மலைப்பாறை
தேடித் தேடித் திரிந்து
நாடி உன்னை சேர்வேன்
என பூண்டாள் சபதம்
உருண்டாள் ஓடினாள்
எழுந்தாள் விழுந்தாள் அருவியென...
வெறிகொண்டாள் வெள்ளமென...
சற்றே ஓய்ந்திருக்க
காதல் வந்து ஆட்கொள்ள
கூடிக்களித்தது நினைவில் வர
கூச்சம் வந்து சூல்கொள்ள
நாணம் வந்து நடைப்பயில
வெட்கமெல்லாம் வெளியேவர
நாணி கோனி நடைப்
பயின்றாள் நதியென
வதனம் முழுதும் சிவந்துவிட
வளைந்து சென்றாள் வில்லென
தொலைவிருந்தே உணர்ந்து
கொண்டான் மன்னவன்
வசந்தமான வஞ்சியவள்
வருகையை...
அலைஅலையென ஆர்ப்பரித்தாலும்
ஆண்மையின் கம்பீரம்கொண்டு
அமைதியுடன் வீற்றிருந்தான்
மங்கையிவள் மோகம்கொண்டாள்
மன்னிப்பை மன்றாடி
மாலையானாள் மன்னவன் மார்பில்
வஞ்சியிவள் வாகை சூடி
வாழ்விக்கிறாள் வையகத்தை
ஊடல்கொண்டு உய்விக்கிறாள்
கூடல்கொண்டு குளிர்விக்கிறாள்
மன்னவனும் மங்கையிவளும்
மங்கலமாய் வாழ்ந்திருக்க
மலர்கள் தூவி மஞ்சம்
கொடுப்போம் மண்ணுலகை...
பொறுமையாய் வாசித்த நட்புகளுக்கு
நிவேதாவின் நன்றிகள் பல...
